How can I get Involved?

Home  »  About CEP  »  நான் எப்படி ஈடுபாடு கொள்வது?
ஒரு நெருக்கடியின் போது, நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
அவ்வாறு செயல்பட, நெருக்கடி வெடிப்பதற்கு முன்பாகவே அதற்கான
அடித்தளத்தை நாம் அமைத்திட வேண்டும்.
 

சமூக ஈடுபாட்டுத் திட்டம் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றுதிரட்டி, இனங்களுக்கிடையிலான பந்தத்தை வலுப்படுத்தி, ஒரு நெருக்கடிக்குப்பின் வெடிக்கக்கூடிய இனப்பதற்றத்தைச் சமாளிப்பதற்கான பதில் நடவடிக்கைத் திட்டங்களை வகுக்கிறது.

ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உள்ளது.
தனிப்பட்ட முறையில், நீங்கள் கீழ்கண்டவாறு ஈடுபாடு கொள்ளலாம்.
சமூக ஈடுபாட்டுத் திட்டத்தின் அவசியத்தை உணர்ந்துகொள்ளுங்கள்
 
- தற்போது சாதகமாக உள்ள இனங்களுக்கிடையிலான உறவுகள் எப்போதுமே நிலைத்திருக்கும் என்று நாம் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. ஒரு நெருக்கடியின்போது, நமது சமூகத்தில் விரிசல் ஏற்படக்கூடும். மேலும், அத்தகைய ஒரு நெருக்கடிக்குப் பின் அமைதி காப்பதும் அவசரப்பட்டு கண்மூடித்தனமான செயல்களில் ஈடுபடாமல் இருப்பதும் சமூகங்களுக்குச் சிரமமானதாக இருக்கலாம்.
- ஆகவே, ஒரு நெருக்கடியின்போது எதை எதிர்பார்ப்பது, எப்படிச் செயல்படுவது என்று நாம் அறிந்து வைத்திருக்கவேண்டும். சமூக ஈடுபாட்டுத் திட்டம் என்றால் என்ன என்று மேலும் தெரிந்துகொள்ள இங்கே தொடங்குங்கள். அத்துடன், உங்கள் யோசனைகளையும் கருத்துகளையும் தெரிவியுங்கள்.
தனித்தனி இனங்களின் மற்றும் சமயங்களின் பன்முகங்களையும் வளமையையும் அனுபவிக்கும் அதே வேளையில், இன மற்றும் சமய
நல்லிணக்கத்தோடு ஒன்றாக வாழுங்கள், விளையாடுங்கள், பயிலுங்கள் மற்றும் பணியாற்றுங்கள்.
 
- சமூகத்திற்குள்ளாகவும், சமூகங்களுக்கிடையிலும் நாம் நம்பிக்கையை வளர்க்க வேண்டும். வீட்டில் உங்கள் அண்டை வீட்டாரையும், வேலையிடத்தில் உங்கள் சக ஊழியர்களையும் மற்றும் பள்ளியிலும் விளையாடும் நேரத்திலும் உங்கள் நண்பர்களையும் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
- சிங்கப்பூரில் உள்ள பல்வேறு இன மற்றும் சமயக் குழுக்களின் நம்பிக்கைகளையும் கலாச்சாரத்தையும் தெரிந்துகொள்வோம், வாருங்கள்.
- சிங்கப்பூரின் பிரதான சமயங்கள் தொடர்பான தகவல்களுக்கு இங்கே தொடங்கலாம்.
நெருக்கடிகளையும் அவசரகாலங்களையும் சமாளிக்க பயிற்சி பெறுங்கள்
 
- தயார்நிலை நமது பலகீனங்களைக் குறைத்துக்கொள்ள உதவும். தனிப்பட்ட முறையில், நாம் நெருக்கடிநிலைகளை சமாளிக்க ஆயத்தமாக இருக்க வேண்டும். பயிற்சி பெறுங்கள் - அப்போதுதான் எப்படிச் செயல்படுவது என்று உங்களுக்குத் தெரியும்.
- உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மற்றவர்களுக்கும் எப்படி உதவலாம் என்பதற்கு, இதோ சில குறிப்புகள்:-
 
  • நீங்கள் ஏன் உங்கள் தொகுதியின் அவசரகால தயார்நிலை தினத்தில் கலந்துகொள்ளக்கூடாது? இத்தகைய நிகழ்ச்சிகள் பற்றியும் அவற்றில் எப்படி ஈடுபடுவது என்பது பற்றியும் இங்கே தெரிந்துகொள்ளலாம்.
  • அத்தியாவசிய குடிமைத் தற்காப்புத் திறன்களை மற்றும் அறிவாற்றலைக் கற்றுக்கொள்ள பலதரப்பட்ட திட்டங்கள் உள்ளன. பயிற்சிகள், கல்விச் சாதனங்களின் வினியோகம், பயிற்சிக் கருவிகள் மற்றும் சமூக நிகழ்ச்சிகள் இவற்றுள் அடங்கும். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் (SCDF) இணையத்தளத்தில் பலதரப்பட்ட சமூக நிகழ்ச்சிகள் உள்ளன. நீங்களும் இப்போதே பதிவு செய்துகொண்டு அவற்றில் ஈடுபடலாமே.
மீண்டெழத் தயாராக இருங்கள்
 
- ஒரு நெருக்கடியின்போது, நாம் நிதானமாக இருந்து நமது வாழ்க்கைமுறை கூடிய விரைவில் வழக்கநிலைக்குத் திரும்புவதை உறுதிசெய்யவேண்டும்.
- மீண்டெழுவது என்பது ஒரு மனோநிலை. இந்த மனோநிலை நாம் எந்த அளவுக்குத் தயார்நிலையில் இருக்கிறோம் என்பதன் மூலமாக வெளிப்படும்.
- தனிப்பட்ட முறையில், நாம் நமக்காகவும் நமது அன்புக்குரியவர்களுக்காகவும் ஓர் “அவசரகாலத் திட்டத்தினை” வகுத்து வைத்திருப்பதன்வழி நாம் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தலாம். நாம் ஒரு திட்டத்துடன் தயாராக இருக்கும் பட்சத்தில், நாம் பதற்றமடைய வாய்ப்பில்லை. இந்தத் திட்டம் பல வடிவங்களில் அமையலாம். உதாரணத்திற்கு:
 
  • ஓர் அவசரகாலத்தில் தேவைப்படும் பொருட்களைத் தயார்படுத்தி வைத்துக்கொள்தல். உதாரணத்திற்கு, டாச்லைட், கையடக்க வானொலிப் பெட்டி, முக்கியமான தொலைபேசி எண்கள், மருந்துவகைகள், முக்கியமான பத்திரங்களின் பிரதிகள் மற்றும் மருத்துவ ஒவ்வாமை (அப்படி ஏதேனும் இருப்பின்) அல்லது மருத்துவ பிரச்சினைகள் தொடர்பான விவரங்கள் அடங்கிய மருத்துவ அட்டை போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். ஓர் அவசரகாலத்தில் “சட்டென்று எடுத்துக்கொண்டு புறப்படும் வகையில்” இந்தப் பொருட்கள் ஒரு “தயார்நிலைப் பையில்” வைத்திருக்கப்படவேண்டும். தயார்நிலைப் பையின் மாதிரி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு தேசமாக நாம் உயிர்வாழ்வது நமது கைகளில் உள்ளது.
வாருங்கள் தயாராவோம், தயாராகவே இருப்போம்,
ஐக்கியமான சிங்கப்பூருக்காக.